உயிர் கொடுப்போம்
பாஸ்கா விழாவை கொண்டாடுவதற்காக எருசலேம் சென்று கொண்டிருக்கும் போதுதான் வழியில் பெத்தானியாவில் இயேசு, இறந்து போய் நான்கு நாட்கள் ஆகியிருந்த லாசருக்கு உயிர் கொடுக்கின்றார்.
எருசலேமில் தனது உயிர் எடுக்கப்படும் என்று தெரிந்திருந்தாலும் சிறிதும் கலக்கமின்றி பிறருக்கு உயிர் கொடுக்கும் இயேசு மீண்டும் ஒரு முறை தனது பிறரண்பை வெளிப்படுத்துகின்றார்.
இயேசு லாசருக்கு நாம் நினைக்கின்ற வாழ்வதற்கான வெறும் உயிரை மட்டும் கொடுக்கவில்லை, மாறாக அதையும் கடந்து எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உயிரையும் கொடுக்கின்றார்.
இறந்து போன லாசரின் உடல் துணிகளால் சுற்றி கட்டப்பட்டிருந்தது. உண்மையான லாசர் துணிகளால் மறைக்கப்பட்டிருந்தார். இயேசுவோ கட்டுகளை அவிழ்த்துவிட கட்டளையிடுகின்றார். வாழ்க்கையில் தான் நல்லவன், அறிவாளி, உயர்ந்தவன் என்று நாம் அணிந்திருக்கின்ற பல முகமூடிகளை அகற்றி உண்மையான ‘ நான்’ ஐ வெளிக்கொணர்ந்திட வேண்டிய ‘சுய மதிப்பு’ என்ற உயிரை இயேசு தருகின்றார்.
லாசரின் கல்லறை மிகப் பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது. இயேசு அக்கல்லை அப்புறப்படுத்த கட்டளையிடுகின்றார். பிறரது ஏச்சுக்கள், பேச்சுக்கள், கேலிகள், நமது தாழ்வு மனப்பான்மை என்ற பல்வேறு கற்கள் நம்மை வளரவிடாது தடுத்துக் கொண்டிருக்கலாம். அவற்றை நகர்த்தி விட்டு வெளிவர இயேசு ‘தன்னம்பிக்கை’ என்ற உயிரைத் தருகின்றார்.
கல்லறையில் இருந்த லாசரை ‘லாசரே வெளியே வா’ என்று இயேசு அழைக்கின்றார். நம்மை நாமே பல்வேறு காரணங்களால் தனிமைப் படுத்திக் கொண்டு பிறரோடும் சமூகத்தோடும் எவ்வித உறவுமின்றி ‘பயம்’ என்ற கல்லறையில் இருக்கின்ற நாம், வெளியே வர இயேசு ‘ துணிவு’ என்ற உயிர் கொடுக்கின்றார்.
ஆக இயேசு தருகின்ற உயிர் வாழ்வதற்கானது மட்டுமன்றி எப்படி வாழவேண்டும் என்பதற்கானதுமாகும்.
இன்றும் சுயமதிப்பின்றி, தன்னம்பிக்கையின்றி அச்சம் கொண்டு உயிரற்று பல லாசர்கள் நம்மிடையே இருக்கின்றனர்.
இவர்களுக்கு சுயமதிப்பு கொடுக்கும் போது
தன்னம்பிக்கை கொடுக்கும் போது
துணிவு கொடுக்கும் போது
நாமும் பிறருக்கு அர்த்தமுள்ள நல்வாழ்வு வாழ உயிர் கொடுக்கிறோம்.
இத்தவக்காலம் உயிரளிக்கும் காலமாக அமையட்டும்
பென்சி sss

No comments:
Post a Comment