Saturday, April 2, 2011

தவக்காலம் 4-ம் ஞயிறு

பார்வை
1சாமு 16:1,6-7,10-13   எபே 5:8-14  யோவான் 9:1-41
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு நாள் வகுப்பு முடிந்து மாலையில் நுங்கம்பாக்கத்தில் இருந்து வேலப்பன் சாவடிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். பேருந்திலோ சென்னை நகரத்திற்கே உரிய கூட்ட நெரிசல். ஓட்டுனரோ பணிக்கு புதியவராய் இருந்திருப்பார் என்று நினைக்கின்றேன் காரணம் ஒவ்வொரு முறை பேருந்தை நிறுத்தும் போதும் break-ஐ  sudden break-ஆக apply பண்ணியதால் பயணிகள் ஒவ்வொரு முறையும் நிலை தடுமாறினர். பெண்கள் குறிப்பாக முதியோர் அதிகம் கஷ்டப்பட்டனர். பயணிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டாலும் ஓட்டுனரை யாரும் எதுவும் சொல்லவில்லை.
ஆனால் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நடுத்தர மனிதர் ஒருவர் ஒட்டுனரை கவனமாக வண்டியை ஓட்ட சத்தம் போட்டு சொன்னார். ஆனாலும் ஒவ்வொரு நிறுத்தத்திலும் பயணிகள் நிலை தடுமாறுவது தொடர்ந்து கொண்டே இருந்தது. முன் இருக்கையில் அமர்ந்து இருந்தவரோ குரலை இன்னும் அதிகமாக உயர்த்தி ஓட்டுனரை திட்டவும் விவாதிக்கவும் ஆரம்பித்தார். பதிலுக்கு ஓட்டுனரும் சத்தம் போட தொடங்கினார்.
ஓட்டுனரின் பேரில் தான் தவறு என்று பயணிகள் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் ஓட்டுனரை எதிர்த்து பேச அந்த ஒரு மனிதரைத் தவிர வேறு யாரும் (நான் உட்பட)  முன் வரவில்லை.
நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது. கீழே இறங்கியதும் முன்னிருக்கையில் அமர்ந்து ஓட்டுனரின் தவறை தொடர்ந்து சுட்டிக்காட்டிக் கொண்டே வந்த அம்மனிதரின் முகத்தைக் காண்பதற்காக பேருந்தின் முன்புறம் வந்தேன்.
கீழே இருந்து பார்த்த போது அம்மனிதரின் முகம் கண்ணாடி வழியே தெளிவாக தெரிந்தது. அவரின் முகத்தைப் பார்த்த உடன் மிகப் பெரிய அதிர்ச்சி அடைந்தேன். தலையை குணிந்தவாறே எனது பயிற்சி இல்லம் வந்து சேர்ந்தேன்.
பல நாட்கள் அவரின் முகம் என் நினைவுக்கு அடிக்கடி வந்து கொண்டே இருந்தது. இந்நிகழ்வு நடந்து 15ஆண்டுகள் ஆன பின்பும் இன்றும் அவரது முகம் நினைவில் தெளிவாகவே இருக்கின்றது. காரணம் அவர் ஓர் பார்வையற்றவர்.
அவரை பார்வையற்றவர் என்று சொல்ல என்னால் இயலவில்லை. உண்மையில் அன்று பேருந்தில் அவரைத்தவிர மற்ற அனைவரும் தான் பார்வையற்றவர்கள்.
இன்றைய நற்செய்தியில் பல மனிதர்கள் வருகின்றார்கள்.  வாசகத்தை வாசிக்கும் போது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கூர்ந்து கவனித்தோம் என்றால் பார்வையற்றவர் யார் பார்வை பெற்றவர் யார் என்ற உண்மை மிகத் தெளிவாக நமக்கு புலப்படும்.
  • யாருடைய பாவத்தினால் பிறவியிலிருந்தே இவன் குருடனாய் இருக்கின்றான் என்று கேள்விகள் கேட்கின்ற சீடர்கள் உண்மையில் பார்வையற்றவர்கள். (யோவான் 9:2).
  • பார்வைபெற்றவனை,  ‘பார்வையற்று பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவன் இவன்’ என்று இன்னமும் சொல்லிக்கொண்டிருந்த அக்கம் பக்கத்து மனிதர்கள் உண்மையில் பார்வையற்றவர்கள். (யோவான் 9:8).
  • மனிதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த பரிசேயர்கள் உண்மையில் பார்வையற்றவர்கள். (யோவான் 9:16).
  • பிறருக்குப் பயந்து உண்மையைக் கூறாமல் பொறுப்பை தட்டிக் கழித்த பார்வை பெற்ற மனிதனின் பெற்றோர் உண்மையில் பார்வையற்றவர்கள். (யோவான் 9:23).
  • உண்மையை நம்பாமல் திரும்ப திரும்ப உண்மைக்குப் புறம்பாக சாட்சி சொல்ல வற்புறுத்திய யூதர்கள் உண்மையில் பார்வையற்றவர்கள். (யோவான் 9:24).
ஆனால்
இயேசுவை மனிதர் என்றும் (யோவான் 9:11)  
இறைவாக்கினர் என்றும் (யோவான் 9:17)
ஆண்டவர் என்றும் (யோவான் 9:38)
உணர்ந்து கொண்தோடு மட்டுமன்றி பிறருக்கும் பறைசாற்றிய பார்வையற்ற அம்ம்னிதனே உண்மையில் பார்வை பெற்றவன்.
இயேசு தருவது புறப்பார்வையையும் கடந்த அகப்பார்வை.
v  மனிதனின் கஷ்டங்களும் நஷ்டங்களும் பாவத்தின் காரணமாய் அல்ல கடவுளின் செயல் இவை வழியாக வெளிப்படவே நடக்கிறது என்ற அகப்பார்வையை இயேசு தருகிறார் (யோவான் 9:3).
v  மதிப்பே இல்லாத சேற்றின் உதவியால் மதிப்பற்ற பார்வைகொடுத்து, எதற்குமே உதவாதது, முக்கியத்துவம் அற்றது என்று எதுவுமே இல்லை என்ற அகப்பார்வையை இயேசு தருகிறார் (யோவான் 9:6).
v  சட்டங்களை விட மனித நேயமும், மாண்பும் உயர்ந்தது என்ற அகப்பார்வையை இயேசு தருகிறார் (யோவான் 9:14).
இறைவா
இத்தவக்காலத்தில்
என் கண்களைத் திறந்தருளும்.
அகப்பார்வையை தந்தருளும்.
நீரே ஆண்டவர் என பறை சாற்ற வரம் தாரும்.
மனித நேயத்தையும், மாண்பையும் காக்க உறுதி தாரும்.
உயர்வும் தாழ்வும் உம்மை வெளிப்படுத்தும் அனுபவங்களே என்பதை உணரச்செய்யும்.     
ஆமென்.

பென்சி sss

No comments:

Post a Comment

 
;