Friday, December 31, 2010 0 comments

மரியாள் இறைவனின் தாய்

முதல் வசகம் எண் 6:22-27 இரண்டாம் வாசகம் கலா4:4-7 லூக் 2:16-21

தொடக்கத்திருச்சபையில் இயேசுவின் இறைத்தன்மை பற்றியும், மனிதத்தன்மை ப்ற்றியும் நீண்டதொரு விவாதம் நீண்ட காலமாகவே இருந்துவந்தது. மரியாள் (theotokos) கடவுளை சுமந்தவள் என்று அழைக்கப்பட்டபோதிலும் இந்த விவாதத்திற்கு மையப்பொருள் மரியாள் இறைவனின் தாயா? அல்லது மனதனின் தாயா? என்பதுதான். ஏனெனில் ஒரு சாரார் மரியாளை கடவுளின் தாயாக ஏற்றுக்கொள்ள தயங்கினர். நான்காம் நூற்றாண்டில் நடைபெற்ற எபெசெஸ் மற்றும் கால்சிடன் சங்கங்கள் இயேசுவின் இறைத்தன்மையையும், மனிதத்தன்மையையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு மரியாளை இறைவனின் தாய் என்று அறிவித்தது.
இதை தொடர்ந்தே ‘மரியாள் இறைவனின் தாய்விழாவினை திருச்சபையின் பல்வேறு இடங்களில் பல்வேறு நாட்களில் கொண்டாட துவங்கப்பட்டது. இருப்பினும் 1931-ல் தான் திருச்சபையின் அங்கீகரிக்கப்பட்ட விழாவாக இது மாறியது.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின் திருத்தந்தை ஆறாம் பவுல் 1974-ஆம் ஆண்டில் இவ்விழாவினை திருச்சபை முழுவதிலும் வருடத்தின் முதல் நாளில் கொண்டாட பணித்தார்
ஆக இந்த விழாவானது இயேசுவின் இறைத்தன்மையை மையப்படுத்தியிருந்தாலும் திருச்சபை மரியாளின் தாய்மையை சிந்திக்க அழைக்கிறது. முதன்முதலில் மரியாளை இறைவனின் தாய் என்று அழைத்தவள் திருமுழுக்கு யோவானை கருவில் தாங்கியிருந்த எலிசபெத்து (லூக் 1:43)
இயேசுவின் பிறப்பு, பணிவாழ்வு மற்றும் இறப்பு உயிர்ப்பில் மரியாளின் தாய்மை அவளது தியாகத்திலும், உடனிருப்பிலும், அர்ப்பணிப்பிலும் வெளிப்படுகின்றது.
சகமனிதர்களுக்காக தியாகமும், உடனிருப்பும், அர்ப்பணமும் வெளிப்படுகின்ற போது தாய்மை உணர்வு வாழ வைக்கப்படுகின்றது. ஆனால் இன்றைய உலகில் தாய்மையின் பரிவும், பாசமும் வாழ வைக்கப்படுகின்றதா என்றால் மிகப் பெரிய கேள்விக்குறியே.
ஒரு முறை லண்டனில் வாழுகின்ற தனது மகனுக்கு வயதான அப்பா போன் செய்து, “ நாளை, உன் அம்மாவுக்கும் எனக்கும் திருமணமாகி நாற்பதுஆண்டுகள் ஆகின்றது. அந்த நாளை கொண்டாடுவதற்குப்பதிலாக நாங்கள் விவாகரத்துசெய்ய முடிவு எடுத்துள்ளோம்  என்று கூறினார்.
இதைக்கேட்ட மகனுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும். உங்களுக்கு தேவையான பணத்தை ஒவ்வொரு மாதமும் அனுப்புகின்றேனே வயதான காலத்தில் ஏன் இப்படி செய்கின்றீர்கள், எனக்கு அவமானமாக உள்ளது. நான் உடனடியாக அக்காவுக்கு போன் செய்து சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு போனை துண்டித்துவிட்டு அமெரிக்காவில் வாழுகின்ற தன் அக்காவுக்கு போன் செய்து அப்பா சொன்ன விவாகரத்து விசயத்தை சொன்னான்.
விசயத்தை கேட்டதும் அக்காவுக்கு பயங்கரமான கோபம். அக்கா தன் தம்பியிடம் தான் பெற்றோரிடம் பேசுவதாக சொல்லிவிட்டு மறு நாளே புறப்பட்டு இந்தியாவிற்கு வரச்சொன்னாள்.
பிறகு அக்கா தன் அப்பாவிற்கு போன் செய்து, ‘நீங்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவது பற்றி தம்பி சொன்னான். நானும், தம்பியும் நாளை இந்தியா வருகிறோம். அது வரையில் நீங்கள் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று மட்டும் சொல்லிவிட்டு போனை துண்டித்துவிட்டாள்.
போனை வைத்துவிட்டு திரும்பிய அப்பா அமைதியாக அமர்ந்திருந்த தன் மனைவியிடம், ‘வேலை வேலை என்று சொல்லிக்கொண்டிருந்த நமது பிள்ளைகள், நமது திருமணநாள் முழுவதும் நம்மோடு இருப்பதற்காக அவர்களுடைய செலவிலேயே நாளை இந்தியா வருகிறார்களாம். என்ன செய்வது அவர்களை வரவழைக்க எப்படி எல்லாம் நாடகம் போட வேண்டி உள்ளது  என்று புன்னகையோடு சொன்னார்.
இது தான் இன்றைய உலகம். தியாகமும், உடனிருப்பும், அர்ப்பணமும் இயந்திரங்களிடமும், பொழுது போக்கு அம்சங்களிடமும் பணத்திற்கும் தான் கொடுக்கப்படுகிற்தே தவிர மனிதர்களுக்கு காட்டப்படுவதில்லை.
இறைவன் இன்று உங்களையும் என்னையும் 365 நாட்களை அளித்து ஆசீர்வதித்துள்ளார்.
மரியாளைப் போல தாய்மை உணர்வோடு மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போகிறோமா? அல்லது நமது பழைய வழியிலேயே வாழப் போகிறோமா?
இந்தப் புதிய ஆண்டு மனிதர்களாகவும், மனித நேயத்தோடு வாழவும் மற்றோரு வாய்ப்பாக தரப்பட்டிருக்கிறது.
ரசனையோடு உலகைப் பார்க்கவும், ஈடுபாட்டுடன் செயல்படவும், ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும், எதிர்பார்ப்புகள் இன்றி உதவி புரியவும், முழுமையாக அன்பு செய்யவும் இவ்வாண்டில் முடிவெடுப்போம்.
0 comments

என்னுரை...முன்னுரையும் கூட...

வார்த்தையாம் இறைவன் மனிதர்கள்ளும் மனிதர்களோடும்
வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்பதை அழுத்திச் சொல்லவும்
இறைவார்த்தை இன்று நம் வாழ்வியல் ஆகிடவேண்டும்
என்பதை உரக்கச்சொல்லவும்
நான் எடுத்துள்ள சிறு முயற்சியே
இந்த தளம்...

இறைவனின் வார்த்தை வாழ்வை மையப்படுதிய
வாழ்வியல் வார்த்தை – ஆனால்
காலப்போக்கில்
இறைவனை மட்டுமே மையப்படுதிய
இறையியலாக மாறிவிட்டது.
இறையியல் அற்ற வாழ்வியல் உலகில் பல காணக்கிடக்கின்றது
அர்த்தம் தருபவையாகவும் உள்ளன.
ஆனால்
வாழ்வியல் அற்ற இறையியல் அர்த்தமற்றவை மட்டுமல்ல
தேவையற்றவையும் கூட.
ஆக
எனது இந்த இறைவார்த்தை சிந்தனையில்
நீங்கள் தேடும் இறையியல் இல்லாமல் இருக்கலாம்
ஆனால் கண்டிப்பாக
நமக்கு தேவையான வாழ்வியல் இருக்கும் என்பதற்கு
நான் உத்திரவாதம்

உங்கள் கருத்துக்களால் நான் காயப்படமாட்டேன்
ஆனால்
எனது பார்வையை கூராக்க அவை உதவிடும்
ஆகவே உங்கள் கருத்துக்களையும்
அவ்வப்போது பதிவு செய்ய அழைக்கிறேன்

இந்த தளம்
இறைவார்த்தையோடு நம்மையும்
உங்களோடு என்னையும் இணைத்திடட்டும்.

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
பென்சி sss
 
;