Saturday, March 5, 2011

9-வது ஞாயிறு

அடித்தளம்
இணைசட்டம்11:18, 26-32  உரோ 3:21-28  மத் 7:21-27
பாலஸ்தீனத்தில் கோடைகாலத்தில் சிறு ஆறுகள் வற்றிவிடும். அவ்வாறு வற்றிப்போன ஆற்றுப் படுகைகளில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காதவர்கள், திட்டமிடாதவர்கள், பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகள் கண்டால் போதும் என்ற மனநிலை உள்ளவர்கள் எதைப்பற்றியும் யோசிக்காமல் அங்கு வீடு கட்டி குடியேறிவிடுவர். கோடைகாலம் முடிந்து மழைக்காலம் வரும் போது, ஆறு பெருக்கெடுத்து ஓடும் போது, ஆற்றின் படுகைகளில் கட்டப்பட்ட வீடும் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டு விடும்.
மற்ற சிலரோ கட்டப்படுகின்ற வீடு காலத்திற்கும் நிற்க வேண்டும் என்று கற்பாறையை அடித்தளமாக  கொண்டு வீட்டை கட்டி முடிப்பர். கற்பாறையை அடித்தளமாக கொண்ட இவ்வீடுகள் இயற்கை சீற்றத்திலிருந்து காக்கப் பட்டுவிடும்.
இயேசு கூறுகின்ற இந்த உவமையில் வீடு என்பது நமது வாழ்வு. நமது வாழ்வின் அடித்தளமாக எது அமைந்துள்ளது என்ற கேள்வியைத் தான் இயேசு எழுப்புகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகம் கடந்த சில வாரங்களாக நாம் சிந்தித்துவந்த மலைப்பொழிவு பகுதியின் இறுதியாக வருகின்ற நிறைவுப் பகுதியாகும்.
மலைப்பொழிவில் இயேசு கூறிய ஒவ்வொரு வார்த்தையும் வாழ்வுப்பாடங்கள். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் வாழ்வு என்ற வீடு கட்டப்பட வேண்டும்.
 “என் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர் பாறை மீது தம் வீட்டைக்கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்” மத்7:24
ஆக இறைவனின் வார்த்தையை கேட்பதோடு நின்று விடாமல் அவற்றை செயல்படுத்தவும் இன்றைய வாசகம் நம்மை அழைக்கின்றது.
நமது விசுவாசம் சொற்களில் அல்ல செயல்களில் வெளிப்படவேண்டும்.
பெயரளவில் வாழுகின்ற வார்த்தைக் கிறிஸ்தவர்கள் இன்று பெருமளவில் நம்மிடையே உள்ளனர். ஆனால் இயேசுவுக்கு சான்று பகர்கின்ற சாட்சிய வாழ்வு வாழுகின்ற செயல் கிறிஸ்தவர்கள் தாம் இன்று நமக்கு தேவை.
“வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்” – இந்த வாக்கியத்தை ஒரு வார்த்தையில் சொல்ல முடியுமா என்றால் “கீழ்படிதல்” என்ற ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம்.
கீழ்படிதல் என்பது ‘கேட்டு அதன் படி நடத்தல்’.
ஆக இறைவனுக்கு கீழ்படிந்திட அழைக்கப்படுகின்றோம்.
இறைவார்த்தைக்கு கீழ்படிந்திட அழைக்கப்படுகின்றோம்.
நான் இன்று யாருக்கு கீழ்ப்படிகின்றேன்?
எனது வாழ்வின் / செயல்களின் அடித்தளம் எது?
இக்கேள்விகள் நாம் நுழைய இருக்கின்ற தவக்காலத்தின் அர்த்தத்தினை ஆழப்படுத்திடும் என்பதில்  ஐயமில்லை.
பென்சி sss
 

No comments:

Post a Comment

 
;