Saturday, February 19, 2011

கிறிஸ்துவ அன்பு....

லேவி 19:1-2,17-18    1கொரி 3:16-23    மத் 5:38-48
இரத்த உறவு, திருமண பந்தம், நண்பர்களின் நட்பு, வியாபார அன்பு, சமூக பாசம், தன்னல அன்பு என்று அன்பினை பல வகைகளாக கூறுவது போல் இன்றைய நற்செய்தி கிறிஸ்துவ அன்பை பற்றி கூறுகின்றது.
ஒவ்வொரு கிறிஸ்தவனும் எத்தகைய அன்போடு வாழவேண்டும் என்பதை அழகாக எடுத்துக் கூறுகின்றது.
 கிறிஸ்துவ அன்பு ஆழமானதாகவும், உண்மையானதாகவும் இருக்கவேண்டும் என்பதை கூறுகின்றது.
கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு சமூக நீதியாகவே இருந்த்தது. இன்றும் பாதிப்பு கொடுத்தவர்களுக்கு தண்டனை தருவதைத் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு தருகின்ற நீதியாக நாம் கருதுகின்றோம்.
தண்டனையின் அளவுகள் மாறியிருக்கின்றதே தவிர பார்வைகள் மாறவில்லை. ஆக இதுதான் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதியாக, உரிமையாக இன்றும் இருக்கின்றது.
கண்ணத்தில் அறை வாங்குவது அன்று மட்டுமல்ல என்றுமே ஒரு அவமானமான இழிவான செயலாகவே கருதப்பட்டு வருகின்றது. தனது அவமானமானத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை அளிப்பது ஒருவனுக்கு உரிமையாக இருப்பினும், அவர்களை தண்டனைக்கு உள்ளாக்காமல், மேற்கொண்டும் அவமானத்திற்கு தன்னையே உள்ளாக்கிட அழைக்கிறார் இயேசு. காரணம்..... கிறிஸ்துவ அன்பு
ஆளுநர்களும், படைவீரர்களும் தங்களது உடைமைகளை சுமந்து வர குடியானவர்களை அழைப்பது வழக்கம். குடிமக்களும் ஒருகல் தொலைவு போகவேண்டும். அது கட்டளை ஆனால் ஒரு கல் தொலைவிற்கு மேல் மக்களை அழைத்திட எவருக்கும் உரிமையில்லை. ஆனால் இயேசுவோ அவ்வாறு யாராவது அழைத்திட்டால் மேலும் ஒரு கல் தொலைவு நடந்திட கூறுகிறார். காரணம்..... கிறிஸ்துவ அன்பு
வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லை என்றால், அல்லது பொருட்களோ, பணமோ பிறருக்கு கொடுக்க வேண்டியிருப்பின், கொடுக்காத பட்சத்தில் அவனிடமிருந்து அங்கியை எடுத்துக்கொள்ள உரிமை உண்டு. ஆனால் மேலாடையை எடுத்துக்கொள்ள உரிமை இல்லை. காரணம் யூதர்களுக்கு மேலாடை வெயிலுக்கும், குளிருக்கும் மிகவும் இன்றியமையாதது. ஆனால் இயேசுவோ அவ்வாறு ஒருவன் உள்ளாடையை கேட்கும் போது மேலாடையையும் கொடுக்க சொல்கிறார். காரணம்..... கிறிஸ்துவ அன்பு
ஆக கிறிஸ்துவ அன்பு என்றால் என்ன?
உரிமையை நிலை நாட்டுவதை விட உண்மை அன்பை வெளிப்படுத்துவதுதான் கிறிஸ்துவ அன்பு....
தண்டனை அளிப்பதை விட தன் மேல் வேதனையை தாங்கிக் கொள்வது தான் கிறிஸ்துவ அன்பு....
கடமையை மட்டும் செய்வதை விட அதையும் தண்டி உதவி செய்வது தான் கிறிஸ்துவ அன்பு....
வன்முறையால் அலைக்கழிக்கப் பட்டாலும் வரையறையின்றி மன்னிப்பது கிறிஸ்துவ அன்பு....
அவமானப்படுத்தப்பட்டாலும், பிறறை அவமானப் படுத்தாமல் அமைதியாய் ஏற்றுக்கொள்வது தான் கிறிஸ்துவ அன்பு....
உலகின் பார்வையில் இவைகள் முட்டாள்தனம்.
உலகத்தின் இலக்கணப்படி இவைகள் அன்பு அல்ல...மாறாக கோழைத்தனம்.
ஆனல் இதுதான் இயேசு வாழ்ந்த்த, போதித்த, நமக்குத் தருகின்ற கிறிஸ்துவ அன்பு...
நமது வாழ்வில் உலகம் வாழும்/காட்டும் அன்பை வெளிப்படுத்துகின்றோமா? அல்லது
இயேசு தரும் கிறிஸ்தவ அன்பை வெளிப்படுத்துகின்றோமா?

No comments:

Post a Comment

 
;