Saturday, February 12, 2011

செயல்களை அல்ல எண்ணங்களை மாற்றுவோம்...

சீராக்15:15-20,   1கொரி2:6-10,      மத்5:17-37
மத்தேயு தனது நற்செய்தியில் இயேசுவை புதிய மோயீசனாக யூதர்களுக்கு காட்டுகின்றார் என்பதை கருத்தில் கொண்டு இன்றைய நற்செய்தியை வாசித்தோம் என்றால் மோயீசனின் சட்டங்களுக்கும் இயேசு தருகின்ற புதிய சட்டங்களுக்கும்உள்ள வேறுபாடுகளும், காரணங்களும் நமக்கு தெளிவாக புரியும்.

மோயீசனின் பத்து கட்டளைகளும், முதல் 5 புத்தகங்களான தோராவும், இறைவாக்கினர்களின் ஆகமங்களுமே யூதர்களின் திருச்சட்டங்களாகும். இவைகள் வழிபாடுகள் பற்றியும், தனிமனித ஒழுக்க நெறி பற்றியும், சமூக வாழ்வு பற்றியும் கூறுகின்றன.

பழைய ஏற்பாட்டு சட்டங்கள் செயல்களை மட்டும் மையப்படுத்தியதாக இருந்தது. ஆனால் இயேசு தருகின்ற சட்டங்கள் செயல்களுக்கு காரணமாக இருக்கின்ற மனப்பான்மையை, எண்ணங்களை நெறிப்படுத்துகின்ற வகையில் இருக்கின்றது.

எண்ணங்கள் தாம் ஒரு மனிதனின் செயல்களை தீர்மாணிக்கின்றன. செயல்கள் சரியாக இருந்தாலும், எண்ணங்கள் தவறாக இருப்பின் அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. ஆக இயேசு புற அடையாளங்களை அல்ல மாறாக அகத்தின் உண்மைத்தன்மையையே நெறிப்படுத்த அழைப்பு விடுக்கின்றார்.

’நீ பீடத்தின் மேல் காணிக்கை செலுத்த வரும் போது, உன் சகோதரனுக்கு  உன் மேல் மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால், அங்கேயே, பீடத்தின் முன், உனது காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள், பின்னர் வந்து உன் காணிக்கையை செலுத்து’ மத் 5:23

இயேசுவின் புதிய சட்டங்கள் எந்த அளவுக்கு ஆழமானவையும், புதிய பார்வையும்  கொண்டது என்று அறிந்து கொள்ள மேற்கண்ட வசனம் ஒன்றே போதும்.

இயேசு புதிய கட்டளைகளை தந்து சட்டங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவில்லை. மாறாக புதிய வழிமுறையை, வாழ்க்கைமுறையை அளிக்கின்றார். இவைகள் பிற சட்டங்கள் காட்டுகின்ற வாழ்வைவிட உன்னதமான நிலைக்கு அழைத்துச்செல்லத்தக்கது.

·         கொலைக்கு காரணமாக இருக்கின்ற கோபத்தை நெறிப்படுத்த அழைப்புவிடுக்கின்றார்
·         விபச்சாரத்திற்கு காரணமாக இருக்கின்ற இச்சையை நெறிப்படுத்த அழைப்புவிடுக்கின்றார்
·         விவாகரத்திற்கு காரணமாக இருக்கின்ற விசுவாசமற்ற தன்மையை நெறிப்படுத்த அழைப்புவிடுக்கின்றார்
·         சத்தியம் செய்வதற்கு காரணமாக இருக்கின்ற நமது நம்பகமற்ற தன்மையை நெறிப்படுத்த அழைப்புவிடுக்கின்றார்
·         ஆக செயல்களை விட அவற்றிற்கு மூல காரணங்களை நேர் படுத்த இயேசு அழைப்புவிடுக்கின்றார்
எண்ணங்களை செம்மைபடுத்துவோம்
செயல்கள் செம்மையாகும்
உயர்ந்த எண்ணம் கொள்வோம்
செயல்கள் உயர்வு பெறும்
பென்சி sss
12.02.11

No comments:

Post a Comment

 
;