கவலைப்படாதே சகோதரா...
எசாயா 49:14-15 1கொரி 4:1-5 மத் 6:24-34
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான கவலைகள் உண்டு. தன்னிடம் இல்லாதவைகள் வேண்டும் என்ற ஏக்கத்தினால் வரும் கவலைகள். எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் கலந்த கவலைகள். கடந்த கால தவறுகளினால் வருகின்ற குற்ற உணர்வு கலந்த கவலைகள். நமது எதிர்பார்ப்புக்கு ஏற்ப பிறர் இல்லாததினால் வருகின்ற கவலைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
அதிகமானோர் கவலைப் படுகின்ற மூன்று விஷயங்கள் என்ன என்ற கேள்விக்கு ஓர் இணையதளம் தந்த பதில் 1. எதிர்காலம் 2. அழகு / உடல் அமைப்பு 3. நற்பெயர்.
நாம் கவலைப்படுவதில்
40% நடப்பதேயில்லை
30% நடந்துவிட்டதை நினைத்து கவலைப்படுகின்றோம்
12% தேவையில்லாத கவலைகள் – அடுத்தவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று...
10% முக்கியத்துவமற்ற கவலைகள் – இன்று இரவு என்ன உணவு..
மீதமுள்ள 8% உண்மையான கவலைகள், கவலைப்பட வேண்டிய விஷயங்கள்.. ஆனால் இந்த 8%-ல்
4% கவலைகள் நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவைகள்- இயற்கை அழிவு..
4% கவலைகள் நமது கட்டுப்பாட்டிற்குள் வருபவை.
ஆக நமது கவலைகள் பொதுவாக நமது நேரத்தை சக்தியை வீணடிக்கின்றது
கவலைகள் ஒரு மனிதனின் முன்னேற்றத்தை, வளர்ச்சியை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
இன்றையெ நற்செய்தி வாசகத்தின் சாராம்சமே கவலைப்படாதே, அதுவும் நாளைய தினத்தைப்பற்றி, எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படுவதை தவிர்த்துவிட அழைப்பு விடுக்கின்றது.
நாளைய தினத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றால், நாளைய தினத்திற்கான தயாரிப்புகளை நிறுத்திவிடு என்று அர்த்தம் கொள்ளலாமா என்று கேட்கலாம்.
கவலை கொள்ளாமல் இருப்பதற்காக இயேசு வானத்துப் பறவைகளையும், காட்டுமலர்ச்செடிகளையும் எடுத்துக்காட்டுகளாக தருகின்றார்.
எங்காவது நீங்கள் ஏதாவது ஒரு பறவை சோம்பேறியாக உட்கார்ந்து இருப்பதை பார்த்திருக்கின்றீர்களா? அல்லது காட்டில் வளருகின்ற மலர்ச்செடி எனக்கு இந்த சூழல் பிடிக்கவில்லை என்று சொல்லி பூக்காமல் தான் இருந்திருக்கின்றதா?
நாளைய தினத்தைப் பற்றி கவலை கொள்ளாதே என்று சொல்லுகின்ற இறைவன் இன்றைய கடமையை கருத்தாய் செய்ய சொல்லுகின்றார். காரணம் நம்மில் பலர் நாளைய கவலைகளில் இன்றைய பொழுதுகளை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம்.
சிலர் வேலை நாட்களில் விடுமுறை எப்போது வரும், விடுமுறையை எப்படி கழிக்கலாம் என்று விடுமுறையையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் விடுமுறை நாட்களிலோ வேலை நாட்களில் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள். மொத்தத்தில் விடுமுறையையும் கொண்டாட மாட்டார்கள், வேலையும் செய்ய மாட்டார்கள்.
வேறு சிலருக்கு கவலைப்படாமல் இருக்க முடியாது. ஏதாவது ஒரு காரணத்தை தேடிப்பிடித்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அப்படியும் காரணங்கள் கிடைக்கவில்லையெனில் கவலைப்பட காரணம் எதுவுமே கிடைக்கவில்லையே என்று சொல்லி கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள்.
சில நேரங்களில் சில சூழ்நிலைகளும், காரணங்களும் உண்மையிலேயே நம்மை ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கும். அவற்றிலிருந்து எப்படி மீளுவது...
உண்மையாய் இரு...
கடமையை செய்...
கடவுளை நாடு...
கவலைகள் பறந்துவிடும்.
பென்சி sss

No comments:
Post a Comment