செப்2:3, 3:12-13 கொரி 1:26-31; மத் 5:1-12மனிதர்கள் தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ கொண்டிருக்கின்ற குறிக்கோள்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
- வெற்றி பெறுவதைச் சார்ந்து இருக்கும்.
வாழ்க்கையில் அதிகமாக பணம் / பொருள் சேர்க்க வேண்டும், புகழ் பெற வேண்டும், பதக்கங்கள் பெறவேண்டும், பதவிகள் அடைய வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக இருக்கும். இதற்காக இவர்கள் சந்திக்கின்ற போராட்டங்களும் போட்டிகளும் இவர்களது வாழ்வின் நிம்மதியை இழக்க வைக்கிறது.
- மகிழ்ச்சியாக இருப்பதைச்சார்ந்து இருக்கும்.
சிலர் வாழ்க்கையில் போதும் என்ற மனதோடு இருப்பதை வைத்துக்கொண்டு சந்தோசமாக வாழ முயற்சி செய்வர். சண்டைகளிலோ, போட்டிகளிலோ, குழப்பங்களிலோ ஈடுபட மாட்டார்கள். ஆனால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லையே என்ற ஏக்கமும், முன்னேறியவர்களைக் கண்டு பொறாமையும் இவர்களிடம் இருக்கும்
- நிறைவாக இருப்பதைச்சார்ந்து இருக்கும்.
பிறரோடு போட்டியோ, ஒப்பீடோ செய்யாமல் தங்களுடைய தகுதிக்கு ஏற்றவாறு உழைப்பவர்கள் இவர்கள். உலகத்தின் பார்வையில் தங்களின் மதிப்பு உயரவேண்டும் என்று எண்ணாமல் மனசாட்சியின் படி வாழ்பவர்கள் இவர்கள். தங்களுக்காக மட்டுமல்லாது பிறருக்காகவும் இவர்கள் வாழ்பவர்கள். இவர்களின் வாழ்க்கையில் அர்த்தமும், நிறைவும் இருக்கும்.
கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது பிறருக்கும் அதிகமாக தெரிந்த ஒரு விவிலிய பகுதியை நாம் இன்று வாசிக்கக் கேட்டோம். மலைப்பொழிவு என்று பரவலாக குறிப்பிடப்படும் இப்பகுதி (கிறிஸ்தவ) வாழ்க்கையின் குறிக்கோளை சுட்டிக் காட்டுகின்றது.
எதை நாம் செய்யக்கூடாது என்று அறிவுரை சொல்ல இன்று பலர் இருக்கின்றனர். ஆனால் எதைச் செய்ய வேண்டும் என்று சொல்ல யாரும் முன் வருவதில்லை.
இன்றைய நற்செய்தி நாம் எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும் என்பதை தெளிவு படுத்துவதோடு வெற்றியையும், மகிழ்ச்சியையும் தாண்டி நாம் நிறைவான வாழ்வை வாழ்வதற்கான வழியை காட்டுகின்றது
இப்பகுதியை புரிந்து கொள்ள அகராதிகளோ, இறையியல் புத்தகங்களோ தேவையில்லை ஆழமாக, கவனமாக வாசித்தாலே போதுமானது. ஆனால் இவ்வார்த்தைகள் சாதாரணமாக சொல்லப்படவில்லை.
மத் 5:1-ல் ‘அமர்ந்து’ இயேசு இவற்றை கற்பிக்கின்றார். மிக முக்கியமானவற்றை குருஜிகளும், அரசர்களும் இன்று ஆயர்களும், திருத்தந்தையும் தங்களது சிம்மாசனத்தில் அமர்ந்து சொல்லுவது தான் வழக்கம். இயேசுவும் அமர்ந்து மிக முக்கியமான இவ்வார்த்தைகளைச் சொல்லுகின்றார்.
மத் 5:2-ல் ‘திருவாய் மலர்ந்து’ என்பதைக் குறிப்பிடும் கிரேக்க மொழி வார்த்தையானது அபூர்வமான மற்றும் இதயத்திலிருந்து வருகின்ற வார்த்தையைக் குறிக்கும்.
ஆக மிக முக்கியமான இவ்வார்த்தைகள் சாதாரணமான வார்த்தைகள் அல்ல மாறாக ஆழமான வார்த்தைகள். உலக மதிப்பீடுகளின் படி பயணற்றதும், அர்த்தமற்றதும் ஆகும்.
ஆனால் வாழ்க்கையில்
நிறைவு இருக்க வேண்டும் என்றால்...
நிம்மதி இருக்க வேண்டும் என்றால்...
அர்த்தம் இருக்க வேண்டும் என்றால்...
இவ்வார்த்தைகளை வாழ்வாக்குவோம்.
பென்சி sss
28.01.11

No comments:
Post a Comment